Published : 11 Dec 2021 03:08 AM
Last Updated : 11 Dec 2021 03:08 AM

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கணக்கெடுக்கும் பணி : கோவை மாவட்டம் முழுவதும் இன்று தொடங்குவதாக அமைச்சர் தகவல்

கோவை

கோவை மாவட்டம் முழுவதும் வீடுகளுக்கே சென்று, மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கவுள்ளது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 163 பேர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஏ.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 71 பேருக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் 23 பயனாளிகளுக்கு ரூ.2.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் வீடுகளுக்கே சென்று, மாற்றுத்திறனாளிகளுடைய தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளது. இக்கணக்கெடுப்பு பணியின்போது மாற்றுத்திறனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு, தொழில் கடன், இலவச வீடுகள், கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் சார்ந்த தேவைகள் குறித்து தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில 150 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்வுகள் மூலமாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 25,514 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிற தகுதியான மனுக்கள் அந்தந்தத் துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x