Last Updated : 11 Dec, 2021 03:09 AM

 

Published : 11 Dec 2021 03:09 AM
Last Updated : 11 Dec 2021 03:09 AM

கோவையில் ரூ.9 கோடி செலவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க திட்டம் :

கோவை

சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோவையின் நீண்ட கால கோரிக்கையை ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கடந்த 2005-ம் ஆண்டு முதல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. கோவையை விட பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு விட்டது. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களிலும் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால் கோவையில் இல்லை.

கடந்த, 2013-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைப்பது குறித்து மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது. 2014-ம் ஆண்டு இப்பணிக்காக ரூ.6 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு நிதியாதாரங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து அறிவிப்புகள் வெளியாகின. ஆனாலும் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி நிறைவு பெறாமலேயே உள்ளது. சுற்றுச்சுவர், தார் தளம், ஷாக் பேட் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று, அதற்குப் பிறகு பணிகள் நடைபெறாததால் அவையும் தரமற்ற நிலைக்கு வந்து விட்டன.

கோவையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிளப் அணிகளில் இருந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் திறமை பெற்ற வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். தரமான விளையாட்டு மைதான வசதி இல்லாதது, அவர்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.

‘நமக்கு நாமே’ திட்டத்தில்

இந்நிலையில், சர்வதேச தரத்தில்ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியை தமிழக அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் நிறைவேற்ற தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவைமாவட்ட ஹாக்கி சங்கம் மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஉறுப்பினர் கே.சண்முகசுந்தரம் மேற்கொண்ட முயற்சியால், விரைந்து நிதியைப் பெற்று 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக ஹாக்கி சங்க செயலாளர் (பொறுப்பு) பி.செந்தில்ராஜ்குமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை கட்டமைக்க தொடர்ந்து பணி செய்து வருகிறோம். தற்போது மக்கள் பங்களிப்புடன் கூடிய அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் இதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பார்வையாளர் மாடத்துடன் கூடிய பெரிய அளவிலான ஹாக்கி மைதானம் மற்றும் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் ஆடக்கூடிய வகையிலான சிறிய மைதானம் என இரு மைதானங்களை மின் விளக்கு வசதியுடன் அருகருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.9 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில், ரூ.3 கோடியை மக்கள்பங்களிப்பாகவும், ரூ.6 கோடியை அரசிடம் இருந்து பெற்றும், பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மக்கள் பங்களிப்புக்கான நிதியானது ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

கோவையில் ஹாக்கி மைதானம் வந்து விட்டால் திறமையான வீரர்களை உருவாக்க இது உதவும். அதோடு தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரை சர்வதேச தரத்திலான மைதானம் இல்லை. இது முதல் மைதானமாக அமைவதுடன், மேற்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் திறனை வளர்த்துக் கொள்ள உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x