Published : 11 Dec 2021 03:11 AM
Last Updated : 11 Dec 2021 03:11 AM
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக்கவம் அணிந்து, கிருமி நாசினி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தொற்று பரவல் அச்சமின்றி மக்கள் உலா வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் ஒரு லட்சத்து ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் 1714 பேர் உயிரிழந்தனர். சேலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 40 என்ற எண்ணிக்கையில் உள்ளது. நேற்று மட்டும் 38 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், காய்கறி மார்க்கெட், திரையரங்கம், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், பழைய, புதிய பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கரோனா தொற்று விதிமுறைகளை மறந்து சமூக இடைவெளி இன்றி உள்ளனர்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு அடிவாரம், ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மல்லூர், ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு, தனியார் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நகரப் பேருந்துகளில் மாணவ, மாணவியர் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேபோல, பெண்களும், ஆண்களும் வேலைக்காக வெளியூர்களில் இருந்து சேலம் வந்து செல்கின்றனர்.
கரோனா தொற்று பரவல் இருக்கும் சூழ்நிலையில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் நகரப் பேருந்துகளில் மக்கள் பயணித்து வருகின்றனர்.
இதனால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ‘சேலத்தில் தொற்று பரவல் அபாயம் மறந்து பொது இடங்களிலும், நகர பேருந்துகளிலும் பொதுமக்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் தவிர்த்து படிகளில் தொற்றிக் கொண்டு பயணிக்கும் அவலம் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்து, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT