Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM

நூற்பாலை தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் மனு

கோவை மாவட்டத்தில் அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர்,மேட்டுப்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில் 300-க்கும்மேற்பட்ட சிறு நூற்பாலைகள் உள்ளன. இங்கு வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். நூற்பாலைகளில் அரசின்விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றகுற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், சரவணம்பட்டியில் உள்ள நூற்பாலையில் பெண் தொழிலாளி, ஆலை நிர்வாகிகளால் கடுமையாக தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மாவட்டம்முழுவதும் நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக, கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது,‘‘சிறு நூற்பாலைகளில் அரசு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. நூற்பாலையும், தங்குமிடமும் வேறு இடத்தில் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நூற்பாலைகளின் வளாகத்தில் தான் தங்குமிடங்கள் உள்ளன. ரூ.8 ஆயிரத்தை அளித்து 8 மணி நேரத்துக்கு பதில் 16 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். சுகாதாரமான தங்குமிடவசதி, குடிநீர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. விசாகா குழுக்களும் அமைப்பதில்லை. ஆண், பெண் தொழிலாளர்கள் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். நூற்பாலைகளில் வருவாய்த்துறை, தொழிலாளர் துறை,தொழிலக சுகாதார பாதுகாப்புத்துறை, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கொண்ட சிறப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும். காவல்துறை, தொழிலாளர் மற்றும் தொழிலக சுகாதார பாதுகாப்புத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக, தொழிலக சுகாதார பாதுகாப்பு இயக்ககத்தின் அதிகாரிகள் கூறும்போது,‘‘நாங்களும், பல்வேறு அரசுத்துறையினர் அடங்கிய குழுவினரும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நூற்பாலைகளில் தொடர்ச்சியாக ஆய்வு செய்கிறோம். குழுவில் இடம்பெறும் பெண் அதிகாரிகள், பெண் தொழிலாளிகளிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்து பாலியல் சீண்டல்கள், பிரச்சினைகள் குறித்து கேட்டறிகின்றனர். குற்றச்சாட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கிறோம். கண்காணிப்பு இன்னும் தீவிரப்படுத்தப்படும்’’ என்றனர்.

காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘காவல்துறை சார்பில் ஆலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இடங்களில் ‘இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி’ தொடங்கஉத்தரவிட்டுள்ளோம். தொழிலாளர்களுக்கு உரிய பிரச்சினை குறித்துஅந்த கமிட்டி விசாரிக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கைக்குரிய புகார்களை, கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x