Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM
போதை மற்றும் சட்டவிரோத பொருட்களை கூரியர் மூலம் அனுப்ப துணைபுரியும் பார்சல் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கூடுதல் ஆணையர்கள் எச்சரித்துள்ளனர்.
போதைப் பொருட்களை கடத்தும் கும்பல், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களை இதற்காக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்அதிகாரிகள், சென்னையிலுள்ள உள்ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் மற்றும் பார்சல் நிறுவன நிர்வாக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டத்தை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தினர். கூடுதல் காவல் ஆணையர்கள் டி.செந்தில்குமார் (வடக்கு), என்.கண்ணன்(தெற்கு) ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் கூரியர் மற்றும் பார்சல் நிறுவன நிர்வாகிகளிடம் அவர்கள் கூறியதாவது: கூரியர் நிறுவனங்களில் பார்சல்களைப்பதிவு செய்யும் போது, அனுப்புநர்மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்களைச்சரிபார்த்த பின்னரே பார்சல்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
பார்சல்களில் அனுப்பப்படும்பொருட்களின் விவரம் மற்றும்அதற்கான ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்கேனர் கருவிகளை கட்டாயம் வைத்திருந்து பார்சல்களில் போதை பொருட்கள் போன்ற சட்ட விரோத பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா? என சரிபார்க்க வேண்டும். அனைத்து கூரியர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் வெளியில் சாலையை நோக்கியும், உட்பறத்திலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 நாட்கள் சிசிடிவி பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பார்சல்களில் சந்தேகப்படும்படி பொருட்களோ அல்லது சட்ட விரோத பொருட்களோ இருப்பது தெரியவந்தால், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். காவல்துறையின் அறிவுரைகளை மீறி செயல்படுவது அல்லது போதை பொருட்கள் மற்றும் சட்ட விரோத பொருட்களை அனுப்புவதற்கு துணை புரியும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இக்கூட்டத்தில் இணை ஆணையர்கள் துரைக்குமார், ராஜேஸ்வரி, பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT