Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

அறநிலையத் துறை கல்லூரிகளில் - சைவ, வைணவ சான்றிதழ் படிப்புகள் தொடக்கம் : மாணவர்கள் சேருவதற்கு அமைச்சர் சேகர்பாபு அழைப்பு

கொளத்தூரில் செயல்படும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தாண்டு புதிதாக சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்து, பாடப் புத்தகத்தை இலவசமாக வழங்கினார். படம்: ம.பிரபு

சென்னை

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று, கபாலீஸ்வரர் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படிப்பில் தற்போது 100 மாணவர்கள் சேர்க்கைபெற்றுள்ளனர். வரும் கல்வியாண்டில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேருவார்கள்.

பல்வேறு நெருக்கடிகளைகடந்து இக்கல்லூரியை ஆரம்பித்துள்ளோம். தற்போது நீதிமன்றவழிகாட்டுதலின்படி கல்லூரியில் சைவ சித்தாந்த படிப்பும்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை முறையாகக் கற்று மாணவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும்.

அறநிலையத் துறையின் சார்பில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஒட்டசத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலைக் கல்லூரியில் சைவ இலக்கிய வகுப்புகள் மற்றும் விளாத்திக்குளம் சுப்ரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரியில் சைவவியல், வைணவவியல் போன்ற சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சேர்ந்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமர குருபரன், கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x