Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM
தொற்றுநோய் அச்சம் நிலவும் சூழலில் பேருந்து நடத்துநர்கள் பின்பற்றும், எச்சில் தொட்டு பயணச் சீட்டு கிழித்து தரும் நடைமுறையை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநர்களில் பலர் பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கும்போது விரலில் எச்சில் தொட்டு பயணச் சீட்டை கிழித்து வழங்குகின்றனர். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சீட்டுகளை தனித் தனியாக பிரித்து வழங்க பேருந்து நடத்துநர்கள் பலரும் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். தொற்று நோய் பரவல் காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை கடும் உத்தரவுகள் மூலம் அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரியைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி செல்வம் என்பவர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சுகாதாரத் துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறியது:
எச்சில் மற்றும் எச்சில் திவளைகள் மூலமே கரோனா, ஒமைக்ரான் எனும் உருமாறிய கரோனா போன்ற தொற்று நோய்கள் அதிக அளவில் பரவும் நிலை உள்ளது. இதை தடுக்கவே முகக் கவசம் அணியும் நடைமுறையை மருத்துவ உலகம் பின்பற்ற வலியுறுத்தி வருகிறது. கரோனா தொற்று பரவல் அச்சமே முடிவுக்கு வராத நிலையில் தற்போது ஒமைக்ரான் உருமாறிய கரோனா தொற்று குறித்த தகவல்கள் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநர்களில் பலர் விரலில் எச்சில் தொட்டே பயணச் சீட்டை கிழித்து வழங்குகின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் பல நடத்துநர்கள் கடுமையாக வாதிடுகின்றனர். கேட்பவர் வலியுறுத்தும் விழிப்புணர்வு குறித்து அவர்களில் பலர் கவலைப்படுவதாக தெரிய வில்லை.
இவ்வாறான சூழலில் அரசின் கடும் உத்தரவுகளால் மட்டுமே பேருந்து நடத்துநர்களின் இதுபோன்ற சுகாதாரமற்ற செயல்பாடுகளை தடுக்க முடியும். இந்த கோரிக்கையின் அவசர, அவசியம் கருதி காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேருந்து நடத்துநர்கள் மத்தியில் அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT