Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM
எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்குமார் (29). பாஜக பிரமுகரான இவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரில் கூறியிருந்ததாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் எனது சித்தப்பா மகள் வசந்தியை நிறுத்த விரும்பினோம். பெரம்பூரைச் சேர்ந்த விஜயராமன் என்பவர் மூலம், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமனை சந்தித்தேன். அவர் ரூ.1 கோடி பணம் கேட்டார். முதல் தவணையாக ரூ.50 லட்சம் கொடுத்தேன்.
ஆனால், வேட்பாளர் பட்டியலில் வசந்தி பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, தரமறுத்துவிட்டார். இந்த மோசடியில் அவரது தந்தை சிட்டிபாபுவுக்கும் தொடர்பு உண்டு. எனவே நரோத்தமன், சிட்டிபாபு, விஜயராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதனிடைய, கிஷன் ரெட்டியின் உதவியாளர் பொறுப்பில் இருந்து நரோத்தமன் நீக்கப்பட்டார். ஹைதராபாத்தில் தங்கியிருந்த நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு ஆகியோரை பாண்டிபஜார் போலீஸார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT