Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

தீவிரமடையும் கோமாரி நோய் தாக்கம் - மொந்தன் வாழை, பன்றி நெய் தட்டுப்பாடு; கடும் அவதியில் விவசாயிகள் :

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி தாக்கத்துக்கு உள்ளாகும் கால்நடைகளை குணமாக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மொந்தன் வாழைப் பழம், பன்றி நெய் கிடைக்காமல் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

கரோனா தீவிர பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டிலும், நடப்பு ஆண்டிலும் சில வாரங்கள் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னரும் கரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வந்தன. எனவே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு செலவில் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி செலுத்தப்படும். இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்ட இடைவெளியால் தற்போது தருமபுரி மாவட்டம் முழுக்க கால்நடைகள் தீவிர கோமாரி நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

கால்நடை மருத்துவர்கள்

வைரஸ் மூலம் பரவக் கூடிய கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்ட பின்னர் கால்நடைகளுக்கு ஆங்கில வைத்தியம் பெரிய அளவில் பலன் தராது என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள். சுகாதாரமான பராமரிப்பால் மட்டுமே இவ்வாறான கால்நடைகளை குணமாக்க முடியும் என்றும் கூறுகின்றனர். மேலும், கோமாரி பாதிப்புக்கு உள்ளாகும் கால்நடைகளின் உடல் அதீத காய்ச்சலுக்கு உள்ளாகும். இதன் தாக்கத்தால் கால்நடைகளின் வாய், மூக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் புண் ஏற்படும். அதீத காய்ச்சலால் ஏற்பட்ட உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த குளிர்ச்சி தன்மை பொருந்திய மொந்தன்வாழைப் பழம், பன்றி நெய் ஆகியவற்றை கால்நடைகளுக்கு உண்ணத் தர வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், இவற்றுக்கான தேவை அதிகரிப்புக்கு ஏற்ப உற்பத்தியை திடீரென அதிகரிக்க முடியாத சூழல் நிலவுவதால் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து, கோமாரி பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் சிலர் கூறியது:

தட்டுப்பாடு

மொந்தன் வாழை சாகுபடி பொதுவாகவே குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பஜ்ஜி உள்ளிட்ட தேவைகளுக்காக காய் பருவத்திலேயே மொந்தன் வாழை அறுவடை செய்யப்பட்டுவிடுகிறது. இதனால் குறைவாகவே பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. கோமாரி தாக்கிய கால்நடைகளுக்கு தர மொந்தன் பழங்களை தேடும் விவசாயிகளுக்கு ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுவது கூடுதல் சுமையாக உள்ளது.

இதுதவிர, பன்றி இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோர், இறைச்சித் தேவைகளுக்காக வெட்டப்படும் பன்றிகளின் உடலில் இருந்து கொழுப்பை பிரித்தெடுத்து உருக்கி சேகரிப்பர். இந்த பன்றிக் கொழுப்பை ‘பன்றி நெய்’ என்று குறிப்பிடுவர். சாதாரண நாட்களில் பன்றிநெய் ஒரு லிட்டர் ரூ.100 முதல் ரூ.200வரையிலான விலைக்கு விற்கப்படும்.ஆனால், தற்போது தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஒரு லிட்டர் பன்றி நெய் ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கலப்படம்

இதுதவிர, திடீர் தேவைக்கு ஏற்ற அளவில் பன்றி நெய் கிடைக்காத சூழலால், சிலர் பன்றி நெய்யுடன் பாமாயிலை கலப்படம் செய்து விற்று பணம் ஈட்டுகின்றனர். ஏற்கெனவே, கோமாரி தாக்கத்துக்கு உள்ளாகி பல உடல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கால்நடைகளுக்கு, கலப்படம் செய்யப்பட்ட பன்றி நெய்யை உண்ணத் தரும்போது அவை வயிற்றுப் போக்குக்கு உள்ளாகி மேலும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.

விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகள் கோமாரியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை குணமாக்க பயன்படக் கூடிய, கால்நடை மருத்துவர்களும் பரிந்துரைக்கக் கூடியபாரம்பரிய சிகிச்சை முறைக்கான பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும், கலப்படம் இன்றியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x