Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

தலைவாசல் கால்நடைப் பூங்கா குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் : சேலம் கிழக்குப் பகுதி விவசாயிகள் கோரிக்கை

சேலம்

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீரை கொண்டு செல்லும் வகையில் தலைவாசல் கால்நடை பூங்கா குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளாக வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டாரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் முக்கிய நீர் ஆதாரமாக வசிஷ்ட நதி, சுவேத நதி உள்ளன. ஆனால், வனப்பகுதிகள் குறைந்தது, போதிய மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த நதிகள் ஆண்டு முழுவதும் வறண்ட நிலையில் உள்ளன.

மேலும், இந்த நதிகளில் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு என இரு நதிகளும் தன்னிலை இழந்துள்ளது. இதனால், மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் வறண்ட பகுதிகளாக மாறிவருகின்றன. எனவே, மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளுக்கு வழங்கும் வகையில் தலைவாசல் கால்நடைப் பூங்கா குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஆனைமடுவு, கரியகோவில் என இரு அணைகள் உள்ளன. ஒரு டிஎம்சி-க்கும் குறைவான கொள்ளளவு கொண்ட இந்த இரு அணைகள் பெரும்பாலும் நிரம்புவதே இல்லை. நடப்பாண்டில், சேலம் மாவட்டத்தில் தற்போது வரை சராசரிக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. எனினும், இந்த இரு அணைகளும் இதுவரை முழுக்கொள்ளளவை எட்டவில்லை.

இதனால், மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் கோடைக்காலத்தில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் 1,000 அடிவரை ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசனத்தை மேற்கொண்டு சிரமப்பட்டு வருகின்றனர்.

தற்போது, தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.270 கோடி மதிப்பில் மேட்டூர் அணையில் இருந்து, தலைவாசல் கூட்டுரோடு வரை குழாய் அமைத்து காவிரி நீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் விரிவாக்கம் செய்து மேட்டூர் அணையில் இருந்து சுத்திகரிக்கப்படாத காவிரி நீரை கால்நடைப் பூங்கா வரை கொண்டு வர வேண்டும். பின்னர், குடிநீருக்குத் தேவையான நீரை இங்கேயே சுத்திகரிப்பு செய்ய வேண்டும். மேலும், சுத்திகரிக்கப்படாத நீரை இங்கிருந்து அடுத்தடுத்த ஏரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு அதிகபட்சம் ஓரிரு டிஎம்சி தான் நீர் தேவைப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, இத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x