Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

தருமபுரி ரயில் நிலைய சாலை ரூ.80 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் : ஆய்வுக்கு பின்னர் செந்தில்குமார் எம்.பி தகவல்

தருமபுரி ரயில் நிலைய சாலை, ரூ.80 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் என ஆய்வுக்கு பின்னர் மக்களவை உறுப்பினர் தெரிவித்தார்.

தருமபுரி நகரில் தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் தருமபுரி ரயில் நிலையத்துக்கு சாலை செல்கிறது. சுமார் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலையில் இருந்து சுற்று வட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கும் சாலைகள் பிரிந்து செல்கின்றன. இந்நிலையில், ரயில் நிலைய பிரதான சாலை மிக மோசமான நிலையில் பழுதடைந்துகாணப்படுகிறது. இப்பகுதியின் மண் தன்மைக்கு ஏற்ற தொழில் நுட்பத்துடன் சாலை அமைக்கப் படாததால் ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் போதும் குறுகிய காலத்திலேயே இச்சாலை மிக மோசமாக சேதமடைந்து வருகிறது.

தற்போதும் பாதிப்படைந்து கிடக்கும் இச்சாலை, வெண்ணாம்பட்டி பகுதி ரயில்வே கேட், புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடம் ஆகியவற்றை நேற்று தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியது:

ரயில் நிலைய சாலை அமைக்க தென்மேற்கு ரயில்வே வசம் வலியுறுத்தப்பட்டது. நகராட்சி, ஊராட்சி, ரயில்வே ஆகிய 3 நிர்வாகங்களின் நிலங்களில் இச்சாலை இருப்பதால் பங்களிப்பு திட்டத்தை ரயில்வே நிர்வாகம் விரும்பியது. அதைத் தொடர்ந்து, இந்த சாலைக்கான திட்ட மதிப்பீட்டு தொகையான ரூ.80 லட்சத்தில் ரூ.40 லட்சம் தருமபுரி நகராட்சி சார்பிலும், ரூ.25 லட்சம் ஊராட்சி சார்பிலும், மீதமுள்ள தொகை ரயில்வே நிர்வாகம் சார்பிலும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாலை அடிக்கடி பழுதாகாமல் இருக்க சாலையோரம் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

ஆய்வின்போது, தென்மேற்கு ரயில்வே முதன்மை மேலாளர் ஆர்.கே.சிங், முதன்மை துணை மேலாளர் ரமேஷ் சந்திரா, நகராட்சி ஆணையாளர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x