Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த கன மழையால் பாலாறு அணைக்கட்டில் இருந்து அதிகபட்ச அளவாக நேற்று மாலை 22,867 கன அடி அளவுக்கு வெள்ள நீர் கரைபுரண்டு வெளியேறியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை இடைவிடாமல் பரவலான மழை பெய்தது வருகிறது.
தமிழக-ஆந்திர எல்லை வரை நீடித்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன மழை பதிவானது. இதன் காரணமாக, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.
கவுன்டன்யா வனப்பகுதியில் பெய்த மழையால் மோர்தானா அணைக்கு நேற்று மாலை 4 மணியளவில் 3,010 கன அடிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அருகேயுள்ள மாடி ஏரி முழுமையாக நிரம்பியதால் மோர்தானாவுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மோர்தானா அணை ஏற்கெனவே நிரம்பியதால் அணையில் இருந்து உபரி நீராக கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் அதிகப் படியான நீர் வரத்து காரணமாக தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அங்கு காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டனர். காமராஜர் பாலத்தின் வழியாகவே போக்கு வரத்து திருப்பி விடப்பட்டது.
நிரம்பும் ராஜாதோப்பு
கே.வி.குப்பம் வட்டம் செஞ்சி கிராமத்தில் உள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரமும் 20.52 மில்லியன் கன அடி நீரையும் தேக்கி வைக்க முடியும். அணையில் 18.70 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ராஜாதோப்பு அணை எந்த நேரமும் நிரம்பும் என்பதால் உபரிநீர் வெளியேறும் செஞ்சி, மோட்டூர், தொண்டான்துளசி, அரும்பாக்கம், கரசமங்கலம், சிங்காரெட்டியூர், வண்டறந்தாங்கல் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.மேலும், தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங் களுக்குச் செல்லவும் நிவாரண முகாம்களில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஓடி பாலாற்றில் கலக்கும் பொன்னை ஆற்றில் நேற்று மாலை 6 மணியளவில் 10,518 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாலாற்றிலும் வெள்ளத்தின் அளவு நேற்று பகல் அதிகரித்ததால் விரிஞ்சிபுரம் பாலாற்றின் தரைப் பாலத்தை விட 3 அடி உயரத்துக்கு வெள்ளநீர் சென்றது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இறைவன்காடு அருகே பாலாறு இரண்டாகப் பிரிந்து திருமணி அருகே மீண்டும் ஒன்றாக இணைகிறது.
தற்போது பாலாற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்த தால் கொத்தகுப்பம் உள்ளிட்ட சில கிராமங்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. விரிஞ்சிபுரம் பாலாற்றில் நேற்று மாலை தடையை மீறி தரைப் பாலத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்ததில் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இளைஞர் மட்டும் தப்பியதாக கூறப்படுகிறது.
பாலாறு அணைக்கட்டு
கடந்த வாரத்தில் அதிகபட்ச வெள்ள அளவாக சுமார் 16 ஆயிரம் கன அடிக்கு வெள்ள நீர் வெளியேறிய நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அதிகபட்ச அளவாக 22,867 கன அடிநீர் வெளியேறியது குறிப்பிடத் தக்கது.
இடைவிடாது பெய்து வரும் மழையால் 3 மாவட்டங்களிலும் மீட்புக்குழுவினர் நிறுத்தப் பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களிலும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT