Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM
தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த தமிழக அணிக்கான சந்தோஷ் கோப்பை கால்பந்து பயிற்சி முகாம் கோவையில் நேற்று தொடங்கியது.
மாநிலங்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான 75-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து 33 அணிகள் கலந்து கொள்கின்றன. தெற்கு மண்டலத்தில் குரூப் - ஏ பிரிவில் தமிழக அணி இடம் பெற்றுள்ளது. தமிழகம் தவிர, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய அணிகள் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. மண்டல வாரியாக நடைபெறும் தகுதிச்சுற்று போட்டிகளில் தமிழகம் தனது முதல் போட்டியில் வரும் 23-ம் தேதி கர்நாடகாவைச் சந்திக்கிறது.
இந்நிலையில், தமிழக அணிக்கான பயிற்சி முகாம் தமிழ்நாடு கால்பந்து சங்கம் (டிஎஃப்ஏ) சார்பில் சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயிற்சி முகாம் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று பயிற்சி முகாம் தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாகிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 45 வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். திறமையாக செயல்படும் 30 வீரர்கள் முகாம் நிறைவில் தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு அவர்களில் இருந்து 22 பேரை போட்டியில் பங்கேற்கும் அணிக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெற உள்ளன. அணியின் தேர்வுக்குழு தலைவராக என்.பாலசுப்ரமணி செயல்பட்டு வருகிறார். சென்னை மற்றும் கோவையை சேர்ந்த சிறந்த பயிற்சியாளர்கள் மூலமாக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT