Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
தொடர் கனமழையால் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் விவசாய நிலங்களிலும், பல வீடுகளில் மழைநீர் புகுந்தது.
பாகூர், கிருமாம்பாக்கம், மதிகிருஷ்ணாபுரம், மேல்பரிக்கல்பட்டு, பரிக்கல்பட்டு கொமந்தான்மேடு சாலை, காட்டுக் குப்பம் அரசு பள்ளி அருகில், கன்னியகோயில், புதுநகர், மணமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி பாதிப்பு இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலமையில் ஊழியர்கள் மழைநீர் வெளியேற்ற 2 பொக்லைன் மற்றும் 13 மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெட்டப்பாக்கம் தொகுதியில் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், இணை இயக்குநர் பலராமன், செயற்பொறியாளர் (பொறுப்பு) திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல் பாகூர் தொகுதியில் செந்தில்குமார் எம்எல்ஏ பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மணமேடு, பாகூர், கன்னியகோயில், சித்தேரி அணைக்கட்டு ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு குறைகளை அவர்களிடம் தெரிவித்தனர்.
அதனை கேட்டறிந்த சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், எம்எல்ஏவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கன்னியகோயில் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை தேசிய நெடுஞ்சாலை வாய்க்காலில் இணைக்க நடவடிக்கை எடுக்கவும், மணமேடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT