Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM
மதுரை மீனாட்சிம்மன் கோயிலுக்கு சொந்தமான புதுமண்டபம் பிரசித்தி பெற்றது. இந்த மண்டபத்தில் உள்ள திருமலை நாயக்க மன்னர் கால சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளையும், வரலாற்று ஆய்வாளர்களையும் கவர்ந்தது.
ஆனால், இந்த மண்டபத்தில் மாத வாடகை செலுத்தி நடத்தி வந்த கடைகளால் இந்த சிற்பங்கள் மறைக்கப்பட்டன. அதனால், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், மண்டபத்தை வியாபாரிகளிடம் இருந்து மீட்டு பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக, வியாபாரிகளுக்கு மாற்று இடமாக மாநகராட்சி சார்பில் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது.
சத்திரத்துக்கு வியாபாரிகள் செல்ல மறுத்ததால் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் நேற்று முன்தினம் மின் விநியோகத்தை துண்டித்தது. அதனால், வியாபாரிகள் கடைகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள், குன்னத்தூர் சத்திரத்தில் மின்சார வசதியில்லை என்றும் மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், அதுவரை புதுமண்டபத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து குன்னத்தூர் சத்திரத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தித் தர கோயில் நிர்வாகமும், மாநகராட்சியும் ஏற்பாடு செய்து வருகின்றன. அதுவரை மின்சாரம் விநியோகத்தை கோயில் நிர்வாகம் மீண்டும் புதுமண்டபத்துக்கு வழங்க தொடங்கியுள்ளது. குன்னத்தூர் சத்திரத்தில் மின் வசதியை ஏற்படுத்திய பிறகு புதுமண்டபத்தை வியாபாரிகள் காலி செய்வதாக உறுதியளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT