Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM
மோகனூர் காவிரி பாலம் முதல், கடைவீதி வரை புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மோகனூர் நாவலடியான் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் நற்பணி மன்ற நிர்வாகிகள் வேலு ராசாமணி, முருகேசன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளித்தனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
மோகனூர் நகரில் உள்ள நாவலடியான், காளியம்மன், அசலதீபேஸ்வரர், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோயில், காந்தமலை பாலதாண்டாயுதபாணி சுவாமி கோயில், திரவுபதி அம்மன் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
விசேஷ நாட்களில், அனைத்து வாகனங்களும் மோகனூர் பேருந்து நிலையம் வழியாக, மிக குறுகலான சாலையாக அமைந்துள்ள கடை வீதி வழியாகச் சென்று வரும் நிலை உள்ளது. இதனால், சாலைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மோகனூர் காவிரி பாலம் முடியும் இடத்தில் இருந்து மோகனூர் காளியம்மன் கோயில் தெரு வழியாக ஏற்கெனவே உள்ள சாலையை மேம்படுத்தி, புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
இதன் மூலம் கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நேரடியாக மோகனூர் நகருக்குள் வந்து செல்வதற்கு எளிதாகும்.
மேலும், மோகனூர் கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மோகனூர் காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் நாமக்கல் – ப.வேலூர் - காட்டுப்புத்தூர் சாலைகள் இணையும் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT