Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM
குமாரபாளையம் காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வெள்ளத்தடுப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.
குமாரபாளையம் வழியாக பாய்தோடும் காவிரி ஆற்றில் தண்ணீ்ர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரிக் கரையோர மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன, நிர்வாக இயக்குநருமான சி. ந. மகேஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். மேலும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களான புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகள் அனைத்தும் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏதாவது பிரச்சினை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம், என்றும் தெரிவித்தார்.
ஆய்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சிவகுமார், நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT