Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் உள்ள எஸ்ஆர்டி பிஎஸ் தொண்டு நிறுவனத்தில் ‘இடைநிலை பராமரிப்பு இல்லம்’ தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு இடைநிலை பராமரிப்பு இல்லத்தை திறந்து வைத்துப் பேசும்போது, "தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மனநலம் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டோருக்கான இல்லங்களில் குணமடைந்த மனநலம் பாதிக் கப்பட்டவர்கள் சமுதாயத்தில் ஒன்றிணைப்பதற்காக 700 பயனாளிகள் பயன்பெறும் வகையில் மதுரை, ராமநாதபுரம், கன்னியா குமரி, திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ‘இடைநிலை பராமரிப்பு இல்லம்’ தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இடைநிலை பராமரிப்புஇல்லம் அமைக்க ஜோலார் பேட்டையில் உள்ள எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி அங்கீகாரம் வழங்கியது. அதன்படி, இடைநிலை பராமரிப்பு இல்லம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்களுக்கு தேவையான வசதிகளை அரசியல் கட்சி பிரமுகர்கள், வசதிப்படைத்தோர் செய்து தர முன்வர வேண்டும்.
இந்த இடைநிலை பராமரிப்பு இல்லத்தின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு போதிய பராமரிப்பு, அவர்களுக்கான தொழில் பயிற்சி, மீண்டும் அவர்கள் சமுதாயத்துடன் இணைந்து பணிகளை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இங்குள்ள பயனாளிகள் கூடை பின்னுதல், தையல் பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில் பயிற்சிகள் அளித்து அவர்கள் சுயமாக வருவாய் ஈட்டுவதற்கான வழிவகை செய்துதரப்படும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, இடை நிலை பராமரிப்பு மையத்தில் தையல் பயிற்சி வகுப்புகளை ஆட்சியர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் கவிதா, மருத்துவர் மணிமேகலை, மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜிராவ், மனநல மருத்துவர் பிரபவரணி, எஸ்ஆர்டிபிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT