Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM

டெல்டாவில் கொட்டித் தீர்த்த மழை; நாகையில் 31 செ.மீ பதிவு : வேளாங்கண்ணி கடற்கரையில் இடிந்து விழுந்த கண்காணிப்பு கோபுரம்; கண்ணனாறு தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக டெல்டா மாவட்டங் களில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக நேற்று நாகப்பட்டினத்தில் 31 செ.மீட்டர் மழை பதிவானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் (சென்டி மீட்டரில்): நாகப்பட்டினம் 31.04, கீழ்வேளூர் 30.94, தலைஞாயிறு 23.88, வேதாரண்யம் 25.74.

தரங்கம்பாடி 15.85, மயிலாடு துறை 13.87, சீர்காழி 12.72, மணல்மேடு 12, கொள்ளிடம் 11.04.

கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 128 வீடுகள் சேதமடைந்துள்ளன. 49 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

நாகை மாவட்டம் வேளாங் கண்ணி கடற்கரையில் கடலில் குளிப் பவர்களை கண்காணிப்பதற்காக கடலோர காவல் குழுமம் சார்பில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர கண்காணிப்பு கோபுரம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட் டிருந்த 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 7மணி முதல் நேற்று காலை 6 வரை 23 மணி நேரம் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 45 வீடுகள் சேதமடைந்தன. 31 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கும்பகோணம் அருகே பாபுராஜ புரம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியி ருந்ததை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பார்வையிட்டார். மழைநீரை வடியவைக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

தொடர் மழையின் காரணமாக பட்டுக்கோட்டையிலிருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் சாலையில் மதுக்கூர் அருகே கண்ணனாறு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதையடுத்து அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலா ளருமான எஸ்.விஜயகுமார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்டோர் நேற்று இந்த பாலத்தை ஆய்வு செய்து விட்டு வரும் வழியில் அவர்களை மொச்சிக்குளம் பகுதி பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர்.

அப்போது பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழைநீர் தேங்கி அவதிப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டனர்.

இதையடுத்து, அங்கு தேங்கி யுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.

பேரிடர் கால மீட்பு பணிக்காக சென்னை ஆவடியில் இருந்து 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். இதில் 40 பேர் கொண்ட 2 குழுவாக பிரிக்கப்பட்டு, தஞ்சாவூரில் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில் ஒரு குழுவினரும், பட்டுக்கோட்டையில் உதவி ஆய்வாளர் தலைமையில் மற்றொரு குழுவினரும் மீட்பு பணிகளுக்குத் தேவையான ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் கருவிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ரப்பர் படகுகள், தானியங்கி விளக்குகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழையளவு (சென்டி மீட்டரில்): பேராவூரணி 19.6, ஈச்சன்விடுதி 17.2, தஞ்சாவூர் 16.1, பட்டுக்கோட்டை 15.3, மதுக்கூர் 14.5, மஞ்சளாறு 12.5, கும்பகோணம் 12, அய்யம்பேட்டை 11.6, அதிராம்பட்டினம் 11.2, குருங்குளம் 11, வெட்டிக்காடு 10.8, அணைக்கரை 10.7, பாபநாசம் 9.8, வல்லம் 9.7, பூதலூர் 9.2, திருவையாறு 9.1, நெய்வாசல் 8.6, திருவிடைமருதூர் 8.5, ஒரத்தநாடு 7.6, திருக்காட்டுப்பள்ளி 7.3, கல்லணை 6.3.

சிறுமி, மூதாட்டி உயிரிழப்பு

தொடர் மழை காரணமாக, கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கவுதம் என்பவரின் வீட்டில் மண் சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்த இடுபாடுகளில் சிக்கி கவுதம்(28), அவரது குழந்தை அனன்யா(4) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அனன்யா நேற்று காலை உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, மன்னார்குடி உப்புக்காரத்தெருவில் குடிசை வீடு இடிந்துவிழுந்ததில், அதில் தனியாக வசித்து வந்த சரசு(75) என்பவர், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x