Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி கிராம ஊராட்சியை இரண்டாக பிரிக்க கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாப்பாக்குடி ஒன்றியச் செயலாளர் க.மாரிசெல்வம் தலைமையில் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனு:
பாப்பாக்குடி கிராம ஊராட்சியில் 12 வார்டுகளும், அதிக கிராமங்களும் உள்ளன. இந்த ஊராட்சியை இரண்டாக பிரித்து ஒடைக்கடை துலுக்கப்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். 12 வார்டுகள் மொத்தமாக இருப்பதால் அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு பாப்பாக்குடி ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாளை. வியாபாரிகள்
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கடைகளை குத்தகை அடிப்படையில் நடத்திவந்தோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி நடைபெற உள்ளதாக கூறினர். கடந்த 19.12.2020-ல் வாடகையை நிலுவையின்றி செலுத்திவிட்டு கடைகளை காலி செய்தோம். கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஏற்கெனவே வணிகம் செய்த அனைத்து வணிகர்களுக்கும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது ரூ.13.08 கோடி செலவில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் ஒருபகுதியிலுள்ள புதிய கடைகளுக்கு நாளை (10-ம் தேதி) ஏலம் நடைபெறவுள்ளது. அங்குள்ள கடைகளுக்கான வாடகை சதுரஅடிக்கு ரூ.15-ல் இருந்து ரூ.160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், முன்பணமாக 12 மாத வாடகையை வாங்கியிருந்த நிலையில் தற்போது ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை கேட்டுள்ளனர். இதனால், நாங்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
எனவே, பாளையங்கோட்டை பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு மீண்டும் அங்கு கடைகளை ஒதுக்கித்தர வேண்டும். ஏற்கெனவே கடைகளை நடத்தியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT