Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM
கேரளாவில் தேடப்படும் மாவோயிஸ்ட் தீவிரவாதி கைதான நிலையில் அவர் வேலூரைச் சேர்ந்தவர் என்பதால் விரைவில் என்ஐஏ குழுவினர் விசாரணைக்காக வேலூர் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு மாவோ தினத்தை முன்னிட்டு ஆயுதப்பயிற்சியில் ஈடு பட்டதாக அவர்களின் முக்கியத் தலைவர் ராகவேந்திரா உள்ளிட்ட 18 நபர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய மாவோ தலைவரான ராகவேந்திரா (32), பாப்பினிசேரி பகுதியில் கேரள காவல் துறையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டார்.
என்.ஐ.ஏ-வின் முதற் கட்ட விசாரணையில் ராகவேந்திரா (32) ரவி முருகேஷ், வினோத்குமார் ஆகிய பெயர்களில் வலம் வந்துள்ளார். அவரிடம் இரண்டு ஆதார் அடையாள அட்டைகள் உள்ளன. இவர், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. ராகவேந்திராவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், ராகவேந்திராவின் பின்னணி குறித்து தமிழக க்யூ பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக உயர்மட்ட காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது தந்தை ராஜன், வணிகவரித்துறை அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றி கடந்த 2003-ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, தாத்தா கன்னியப்பன், பாட்டி பார்வதியம்மாள் (74) ஆதரவில் அவர் வளர்ந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிப்பை பாதியில் கைவிட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, காணாமல்போன பேரனை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் எனக்கோரி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பார்வதியம்மாள் புகார் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கை அப்போது உதவி ஆய்வாளராக இருந்த தேவதாஸ் விசாரித்துள்ளார். இதில், ராகவேந்திராவை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கை மூடியுள்ளனர். இது தொடர்பாக அவரது பாட்டியிடமும் அறிக்கை அளித்துள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு மாய மானவர் இப்போது சிக்கியுள்ளார். ராகவேந்திராவின் குடும்ப பின்னணி குறித்து விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ குழுவினர் விரைவில் வேலூருக்கு வர உள்ளனர். அவர்கள் யாரிடம் எல்லாம் விசாரிப்பார்கள் என தெரியாது’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT