Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமி பத்ம விருதை டெல்லியில் 8-ம் தேதி பெறுகிறார் :

தான் உருவாக்கிய அப்துல்கலாம் சுடுமண் கலைச் சிற்பத்துடன் டெரகோட்டா கலைஞர் முனுசாமி.

புதுச்சேரி

புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமி டெல்லியில் பத்ம விருதை வரும் 8-ம் தேதி பெறுகிறார்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருவோருக்கு கடந்த 2020 ஜனவரியில் மத்திய அரசு பத்ம விருதுகளைஅறிவித்தது. இதில் கலைப் பிரிவில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டையில் வசிக்கும் வி.கே.முனுசாமிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்விருது வழங்கும் நிகழ்வு வரும் 8-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கிறது.

குடியரசுத் தலைவர் கையால் இவ்விருதை டெரகோட்டா கலைஞர் முனுசாமி பெற இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த சுடு களிமண் கலையை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கு இந்த கலையை கற்றுத் தருகிறேன். நான் 8-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு டெரகோட்டா பயிற்சி தந்துள்ளேன். அத்துடன் 2,258 கைவினை ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சியை அளித்துள்ளேன். இதன் மூலம் இந்த கலை பாதுகாக்கப்படும்.

இந்தப் பணிக்காக மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு பத்ம விருது அறிவிக்கப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் கையால் விருது பெறுவது என் போன்ற கலைஞர்களுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. தேசிய விருதுகள், யுனெஸ்கோ விருதுகள் என 78க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருந்தாலும் பத்ம விருது கிடைத்திருப்பது பாரம்பரிய கலைகளை பாதுகாக்க உதவும். இந்த விருது பெற நாளை மறுநாள் (நவ.6) டெல்லி புறப்படுகிறேன். டெரகோட்டா கலை சிறப்பான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு டெரகோட்டா பயிற்சி தந்துள்ளேன். அத்துடன் 2,258 கைவினை ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சியை அளித்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x