Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM
சென்னையில் பருவமழையால் சாலைகளில் 942 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய ரூ.1.50 கோடியில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி தொடங்கிஉள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இச்சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீர் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
பருவமழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள், குழிகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சீரமைக்க, ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில் 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் ஜல்லி கலவை, சிமெண்ட் கான்கிரீட் கலவை அல்லது குளிர்ந்த தார் கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 டன் குளிர்ந்த தார் கலவை கையிருப்பில் உள்ளது. மேலும், 250 டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லி கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவையை தேவையான அளவுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களுக்குட்பட்ட சாலைகளில் சிறு பள்ளங்களை சரிசெய்யும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், மரக்கிளைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் உட்புறச் சாலைகள் மற்றும் போக்குவரத்து சாலைகளில் பள்ளங்கள், குழிகள் மற்றும் மழைநீர் தேக்கம் இருந்தால் 1913 என்ற உதவி எண்ணுக்கும், 044-2561 9206, 2561 9207 மற்றும் 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT