Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM

அதிக ஒலி எழுப்பும் : பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளின் ஒத்துழைப்போடு, அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது பொதுமக்களின் கடமையாகும். எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கையில், “பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வெடிக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம், முறையாக பின்பற்ற வேண்டும். பட்டாசு மற்றும் மத்தாப்புகளை திறந்தவெளியில் பயன்படுத்த வேண்டும். சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், பட்டாசு வெடிக்கும் சமயங்களில் அறைகளிலேயே தங்கிக் கொள்ளலாம். பட்டாசுகளை கைகளில் வைத்து கொளுத்தக்கூடாது.

எரியும் மெழுகுவர்த்திக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது. பட்டாசுகளை பற்ற வைத்து அருகில் உள்ளவர்கள் மீது தூக்கி எறியக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது, சானிடைசர் பயன்படுத்தக்கூடாது. மேலும், சானிடைசர்களை பட்டாசுகளுக்கு அருகில் வைத்திருக்கக்கூடாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x