Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

நகைக்கடையில் மோசடி செய்த பெண் கைது : ரூ.17.5 லட்சம் மதிப்பிலான 48.5 பவுன் நகைகள் பறிமுதல்

தஞ்சாவூர் நகைக்கடையில் பக்கத்து கடைக்காரர் வாங்கி வரச் சொன்னதாகக் கூறி, ரூ.17.5 லட்சம் மதிப்புள்ள நகையை எடுத்துச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் தொப்புள் பிள்ளையார் கோயில் அருகே நாராயணன் மகன் தேவாராம்(20) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இருந்து தஞ்சாவூர் மாநகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு நகைகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வது வழக்கம்.

அதன்படி, அக்.29-ம் தேதி இவருடைய கடைக்கு தொலைபேசியில் பேசிய பெண் ஒருவர், அதே பகுதியில் சற்று தொலைவில் உள்ள மற்றொரு நகைகடையில் இருந்து பேசுவதாகவும் தங்கள் கடைக்கு வேண்டும் என 4 பவுன் எடையுள்ள சங்கிலி 9, 2 பவுன் எடை கொண்ட சங்கிலி 2, 2.5 பவுன் எடை கொண்ட சங்கிலி 1 என மொத்தம் 48.50 பவுன் எடையுள்ள ரூ.17.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கேட்டுள்ளார்.

வழக்கமாக பல்வேறு கடைகளில் இருந்து நகைகளை கேட்பதுபோல, குறிப்பிட்ட நகை கடையிலிருந்தும் நகை கேட்டுள்ளனர் என நினைத்து தேவாராம், பெண் தொலைபேசியில் கூறிய நகைகளை தனியாக எடுத்து ஒரு பேக்கில் வைத்தார். சற்றுநேரத்தில் கடைக்கு வந்த இளம் பெண் தொலைபேசியில் கூறிய நகை கடையிலிருந்து வருவதாகக் கூறி, நகையை கேட்டு வாங்கிச் சென்றார்.

பின்னர், சம்பந்தப்பட்ட கடையை தேவாராம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த பெண் மோசடி செய்து நகையை ஏமாற்றி வாங்கிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறிதது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணைத் தேடி வந்தனர். இந்நிலையில், நகையை ஏமாற்றி வாங்கிச் சென்ற பெண் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு சென்ற போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ரம்யா (24) என்பதும், அவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை உள்ளதும், கணவர் இறந்து விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ரம்யாவை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x