Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

‘10.5% உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் : தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவோம்’ :

கோவை

உள் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவோம் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெ.ரத்தின சபாபதி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த அதிமுக அரசு எந்த சட்டத்துக்கும் உட்படாமல், தேர்தலுக்காக, அரசியலுக்காக, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கியது. பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் ஒரு அரசு உத்தியோகம் கூட பெறாத 28 சமூகங்கள் இன்னமும் இருக்கின்ற நிலையில், கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த இந்த உள் இட ஒதுக்கீடுச் சட்டம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். எந்த புள்ளி விவரங்களும் இல்லாமல், குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் 10.5 சதவீதம் கொடுத்து அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் நியாயமற்றது.

இந்த விவகாரத்தில் அதிமுக அரசும், அதைத் தொடர்ந்து திமுக அரசும் பிழைகள் செய்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவை வழங்கியுள்ளது. உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதை எதிர்த்து சட்டரீதியாக நாங்கள் போராடுவோம். விரைவில் தமிழகத்தில் 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. அந்த வேலைவாய்ப்பு பறிபோகாமல் இருக்க இந்த தீர்ப்பு தடுத்துள்ளது.

இந்த முறை சரியாக கவனிக்காமல் விட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலைவாய்ப்புகள் பறிபோகும். இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வரை சந்திக்க முயன்றோம். ஆனால், சந்திக்க முடியவில்லை. பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினரை முதல்வர் இதுவரை சந்திக்காதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x