Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

மாவட்ட அளவில் 8,37,516 வாக்காளர்கள் - புதுச்சேரியிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம் :

புதுச்சேரி

தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2022-ம்தேதி தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நேற்று தொடங்கின. மாஹே, ஏனாம் பகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மாவட்டத்தில் தற்போது 8,37,516 வாக்காளர்கள் உள்ளனர். இத்திருத்தப் பணிகள் 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறும்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூர்வா கார்க் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டிலை வெளியிட்டார். அப்பட்டியலை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “புதுச்சேரி மாவட்டத்துக்கான (மாகே மற்றும் ஏனாம் உட்பட) வரைவு வாக்காளர் பட்டியலில் 3,95,226 ஆண் வாக்காளர்கள், 4,42,193 பெண் வாக்காளர்கள், 97 மாற்று பாலின வாக்காளர்கள் என மொத்தம் 8,37,516 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் முன்னோட்டமாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்வதற்கான காலம் நேற்று (நவ.1) முதல் வரும் 30-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பணியிலிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர், அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருப்பதுடன் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் குறித்த படிவங்களை பெற்றுக் கொள்வார். வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பெயர், விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்க்கலாம்” என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வேல்முருகன் (என்ஆர் காங்.), நீல.கங்காரன் (காங்.), மோகன்தாஸ் (அதிமுக), ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம் (பாஜக), கீதநாதன் (சிபிஐ), நடராஜன் (சிபிஎம்), ராஜாராம் (தேசிய வாத காங்.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x