Published : 02 Nov 2021 03:12 AM
Last Updated : 02 Nov 2021 03:12 AM

காரைக்காலில் தடுப்பணைகள் கட்ட பரிசீலனை : அமைச்சர் சந்திர பிரியங்கா தகவல்

காரைக்கால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் வகை யில், தடுப்பணைகள் கட்ட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார்.

காரைக்கால் கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்ற 67-வது புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சமாதானப் புறாக்களை பறக்கவிட்டார். தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர், அமைச்சர் பேசியது: நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத் தில் பிராந்திய நீர்ப்பாசனத் திட்டத் தின் கீழ், தடுப்பணைகள் கட்ட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விளை நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்யும் விதத்தில் முதல்கட்டமாக ரூ.60 லட்சம் செலவில் 5 ஆழ்குழாய் கிணறுகள் புதுப்பிக்கப்பட அல்லது புதிதாக அமைக்கப்படவுள்ளன.

கால்நடை மருந்தகங்களை செயல்படுத்தும் வகையில் காரைக் காலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படவுள்ளது. திருமலைராயன்பட்டினத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். காரைக்கால் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் மீன் காட்சியகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஹட்கோ நிதியுதவியுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு மற்றும் பதிவு மையம் மேம்படுத்தப்படவுள்ளது. காரைக்காலில் ரூ.14.50 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டங்கள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.

விழாவில், ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், இந்திய கடலோரக் காவல் படை காரைக்கால் கமாண்டண்ட் சி.விவேக் ஆனந்தா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x