Published : 02 Nov 2021 03:12 AM
Last Updated : 02 Nov 2021 03:12 AM

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை மாவட்டங்களில் - 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : வேலூர் மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கின. சுமார் 20 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வந்த மாண வர்களை ஆசிரியர்கள் வாசலில் நின்று மேளதாளம் முழங்க இனிப்பு, மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் கரோனா பெருந் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் வாசலில் நின்று இனிப்பு வழங்கியும், ரோஜா பூ கொடுத்தும் வரவேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 994 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் வரை அமர வைக்கப்பட்டனர்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. காலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், பிற்பகல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். நேற்று 66 ஆயிரத்து 663 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் திருப்பத்தூரில் உள்ள ஒரு சில பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர் அடுத்த கதிரி மங்கலம் அரசுப்பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பிறகு, வகுப்பறைக்கு சென்ற ஆட்சியர் மாணவர்களுக்கு விலங்கு, பறவைகளின் படங்களை கரும்பலகையில் வரைந்து அதன் பாகங்களை குறித்து பாடம் நடத்தினார். அப்போது, திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான 619 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ராணிப்பேட்டை எல்.எப்.சி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பூச்செண்டுகள், இனிப்புகள் மற்றும் எழுதுகோல் கொடுத்து வர வேற்றனர்.

அப்போது, அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கேட்க ஆர்வத்துடன் இருப்பார்கள். மாணவர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கு மாணவ, மாணவிகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கின. சுமார் 20 மாதங்களுக்கு பிறகு, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணி வித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர்.

தி.மலை அடுத்த வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மாலை அணி வித்து ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x