Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM
ராமபட்டணம் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ராமபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ. 29 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் 11 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் தாமோதரன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, ‘‘கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆளுநர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தற்போது திமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுப்பணி மேற்கொள்ளும்போது திமுகவினர் மவுனமாக இருக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என திமுகவினர் இரட்டை வேடம் போடுகின்றனர்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT