Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM
தீபாவளிப் பண்டிகையை யொட்டி முக்கிய வர்த்தகப் பகுதிகளில் மக்கள் திரண்டு வருகின்றனர். வர்த்தகப் பகுதிகளில் நிறுவனங்கள், கடைகளை நடத்துவோர் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொற்று பரவல் விகிதத்தை மேலும் குறைக்க, நோய் தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்புப் பணிகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வர்த்தகப் பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாநகரப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரிலுள்ள உள்ள வர்த்தகப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசத்தை சரியாக அணிகின்றனர். ஆனால், சிலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இன்னும், சிலர் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் அதை மூக்கு பகுதியை முழுவதும் மறைக்காமல் சுற்றித் திரிகின்றனர். இதனால் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அச்சம் உள்ளது.
எனவே, இவ்வாறு வர்த்தகப் பகுதிகளிலுள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சரியாக முகக்கவசம் அணியாதவர்களை பிடித்து கட்டாய கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்றும் முகக் கவசம் அணியாதவர்களுக்கும், முகக் கவசத்தை சரியாக அணியாதவர்களுக்கும் கட்டாய கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சியின் இந்தக் கண்காணிப்பு தொடரும்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT