Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM

தென்காசியில் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கல் :

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4,417 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அன்னை சத்யா குழந்தைகள் நல காப்பகத்தில் உள்ள 48 ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கரோனாவால் பெற்றோரை இழந்த 119 குழந்தைகளுக்கும் மருத்துவ காப்பீட்டு புதிய அடையாள அட்டைகள், இத்திட்டத்தின் கீழ் இருதய சிகிச்சை செய்து பூரண குணமடைந்த பயனாளிகளுக்கு நினைவுப் பரிசுகள், சிறப்பாக பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வார்டுமேலாளர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் முலம் 12 அரசு மற்றும்தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் நிதியாண்டில், தென்காசிமாவட்டத்தை சேர்ந்த மருத்துவமனைகள் மூலம் 2,021 பயனாளிகளுக்கு ரூ.1,63,65,575-சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் ஏழை மற்றும்எளிய மக்கள் நோய் பாதிப்பிலிருந்து மீண்டுவர முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க 07.05.2021முதல் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் முலம்72 பயனாளிகளுக்கு ரூ.78,04,000- சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறுவதற்கு குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.72,000-) குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிவில் சமர்பித்து காப்பீட்டு அட்டையை (ஸ்மார்ட் கார்டை) பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இணைஇயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ) டாக்டர் வெங்கடரெங்கன், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கார்த்திக், மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர்காசி விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x