Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

புதுவையில் தொடர் மழை முக்கிய சாலைகளில் நீர் தேக்கம் :

புதுச்சேரியில் பெய்த தொடர் மழையில் குடை பிடித்து செல்லும் பள்ளி மாணவி. இடம்: கோரிமேடு. அடுத்த படம்: இந்திராகாந்தி சிக்னல் பகுதியில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுவை நகரில் நேற்று காலை 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி, தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. பல சாலைகள் தற்போது பள்ளமாகியுள்ளன. அதில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்தனர். புதுவை பெரிய வாய்க்கால், உப்பனார் வாய்க்கால்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல் திருக்கனூர், பாகூர், மடுகரை, மதகடிப்பட்டு, அரியாங்குப்பம், காலாபட்டு, சேதராபட்டு உள்ளிட்ட கிராம பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பொழிவு நீடித்தது. தீபாவளி வர்த்தகம் சூடுபிடித்துள்ள சூழலில் பொருட்கள் வாங்க வந்தவர்கள், வர்த்தகர்கள், சாலையோர வியாபாரிகள் வரை பலரும் மழையால் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மழைக்கும் இந்திராகாந்தி சிக்னல் அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. புதுவையில் சராசரியாக 110 மி.மீட்டர் மழை பதிவானது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

“கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கனமழை முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்த போது, “பாசனத்திற்காக ஊசுட்டேரியில் இருந்து அமைக்கப்பட்ட பள்ள வாய்க்கால், மேட்டு வாய்க்கால் ஆகியவை ஆக்கிரமிப் புகளால் குறுகியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது இந்திராகாந்தி சிக்னல், பூமியான்பேட்டை பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. முன்பு இருந்ததைவிட தற்போது தண்ணீர் தேங்குவது குறைந்துள்ளது. இந்திராகாந்தி சிக்னலில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண ரூ.11 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. அதை செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x