Published : 30 Oct 2021 03:16 AM
Last Updated : 30 Oct 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று பகலிலும் தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.
இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. மானாவாரி பயிர்கள் முளைக்கும் நேரத்தில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடையாததால் சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறியுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி காமராஜர் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக காணப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கி சகதிக் காடாக மாறியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருந்ததால் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் விடுறை அறிவித்தார்.
மேலும், வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்ததால், மீனவர்கள் மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குலசேகரன்பட்டினம் 38, சாத்தான்குளம் 31, வைகுண்டம் 18, காயல்பட்டினம் 16, திருச்செந்தூர் 14, ஓட்டப்பிடாரம் மற்றும் மணியாச்சி தலா 9, கடம்பூர், வைப்பார் மற்றும் வேடநத்தம் தலா 5, தூத்துக்குடி 4, காடல்குடி 3, விளாத்திகுளம் 2, சூரன்குடி, கீழ அரசடி எட்டயபுரம், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி தலா 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு இரண்டு வீடுகள் பகுதியளவுக்கு சேதமடைந்துள்ளன. சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி ஒரு பசு மாடு உயிரிழந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. அதிகபட்சமாக அடையாமடையில் 71 மிமீ மழை பதிவானது. ஆனைக்கிடங்கில் 54, குருந்தன்கோட்டில் 52, கோழிப்போர்விளையில் 38, மாம்பழத்துறையாறில் 40, பாலமோரில் 29, இரணியலில் 38, குளச்சலில் 22, தக்கலையில் 60, நாகர்கோவிலில் 28, பேச்சிப்பாறையில் 16, பெருஞ்சாணியில் 25, புத்தன் அணையில் 22, சிவலோகத்தில் 19, சுருளகோட்டில் 27, களியலில் 26 மிமீ மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்ட பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர் குழுவினர் பேச்சிப்பாறை, சிற்றாறு, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.80 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 877 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து நேற்று உபரியாக விநாடிக்கு 1,635 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.10 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,035 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,066 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.27 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 792 கனஅடி தண்ணீர் வருகிறது. 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில்தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணை மற்றும் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT