Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM
கோவை மாநகரில் வர்த்தகப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில்கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, மாநகரில் உள்ள ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரியகடை வீதி, கிராஸ் கட் சாலை, நூறடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறையி னருக்கு உதவியாக கல்லூரி மாணவர்களும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். ‘உயிர்’ தன்னார்வ அமைப்பின் உதவியுடன், மாநகரிலுள்ள 10 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை இப்பணியில் சேவை அடிப்படையில் ஈடு படுத்த முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.
உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாயக்கூடத்தில் நடந்த இப்பயிற்சி முகாமுக்கு, கிழக்குப்பிரிவு போக்குவரத்து உதவி ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து, போக்குவரத்து போலீஸார் கூறும்போது, ‘‘மதியம் 1 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் இரவு 7 மணி வரை என 2 ஷிப்ட் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது, நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் தடுப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT