Last Updated : 25 Oct, 2021 03:08 AM

 

Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

பின்னலாடை தொழிலாளர்களுக்கு விரைந்து போனஸ் வழங்க வேண்டும் : உற்பத்தியாளர்களுக்கு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர்

தீபாவளிப் பண்டிகை நாள் வரை காத்திருக்க வைக்காமல் தொழிலாளர்களுக்கு நியாயமான போனஸ்தொகையை விரைந்து வழங்க உற்பத்தி நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை உற்பத்தியில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடை துறையில் ஆண்டுக்குரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதிமற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றின் தாக்கத்தால் அதில் தற்போது ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்தியாவில் நடைபெறும் பின்னலாடை உற்பத்தியில் பெரும்பங்கைத் தன்னகத்தே கொண்டுள்ள திருப்பூரில், உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் சுமார் 8 லட்சத்துக்கும் மேல் உள்ளனர்.

குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்கள், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கியிருந்து பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

இதில், பிற பண்டிகைகளைக் காட்டிலும் தீபாவளிப் பண்டிகை என்பது வெளிமாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் அளிக்கப்படுவதுதான். போனஸ் தொகையை பெற்றுக் கொண்டு சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் தொழிலாளர்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்தே திருப்பூர் திரும்புவார்கள், இதனால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் தீபாவளிப் பண்டிகைக்கு பிறகான ஒரு வார காலத்துக்கு பெரும்பாலும் உற்பத்தி பணியில் இருக்காது. இதனால் திருப்பூர் நகரமே ஒரு வார காலத்துக்கு வெறிச்சோடிய நிலையில் இருக்கும்.

இந்நிலையில் நடப்பாண்டு வரும் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களை இறுதி வரை காத்திருக்க வைத்து உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு தொகையை வழங்கி விடுவதாக புகார்கள் உள்ளன. நடப்பாண்டு எவ்வித புகார்களும் இல்லாத வகையில், தொழிலாளர்களை இறுதிவரை காத்திருக்க வைக்காமல், அவர்களது செலவுகள், ஊர்களுக்கு செல்லுதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி விட வேண்டும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.

இதுகுறித்து சிஐடியு பனியன் தொழிற்சங்க செயலாளர் சம்பத் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

தொழிலாளர்களின் போனஸ் குறித்து எங்களது சங்கம் சார்ந்ததொழிலாளர்கள் பணி செய்யும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் பேசி வருகிறோம். ஓரிரு தினங்களில் போனஸ் அளித்து விட வாய்ப்புள்ளது.

சம்பள பேச்சு வார்த்தை நிறைவு பெற்று சில நாட்களே ஆகியுள்ளது. அதில் குறிப்பிட்ட சதவீத அளவு சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு போனஸ் தொகையில் பெரிய உயர்வை எதிர்பார்க்க இயலாத நிலை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட உயர்வைக் கோரியுள்ளோம்.

அனைத்து பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் முறைப்படி தொழிலாளர்களுக்கு 20 நாட்களுக்கு முன்னதாக போனஸ் வழங்கி விட வேண்டும். ஆனால் பல தொழில் நிறுவனங்கள் தீபாவளி நாள் வரை தொழிலாளர்களைக் காத்திருக்க வைத்து, இறுதியில் ஏதாவது ஒரு தொகையை அளித்து விடுவார்கள். தொழிலாளர்களும் பேசுவதற்கு கூட நேரம் இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல் குடும்ப செலவுகளைப் பார்க்க சென்று விடுவார்கள். அவ்வாறு இல்லாமல் அனைத்து தொழில்நிறுவனங்களும் ஓரிரு தினங்களுக்குள் தொழிலாளர்களுக்கு நியாயமான போனஸ் தொகையை வழங்கி விட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x