Published : 25 Oct 2021 03:11 AM
Last Updated : 25 Oct 2021 03:11 AM
ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
தமிழக-ஆந்திர எல்லையில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கு 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றை வேடிக்கை பார்க்கவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ யாரும் செல்லக்கூடாது என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையொட்டி, காவல் துறையினர் பாலாற்றுப்பகுதியில் கண்காணிப்புப்பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஜவ்வாதுமலை தொடரில் தொடர் மழை பெய்து வருகிறது. ஏலகிரி மலை அத்தனாவூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆண்டியப்பனூர் அணை கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 கன அடியாக உள்ளது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் மாடப்பள்ளி, குரிசிலாப்பட்டு, மட்றப்பள்ளி, ஜம்மனபுதூர், பேராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. நேற்றிரவு 7 மணியளவில் முத்தம்பட்டி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணையை ஒட்டியுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் மேலும் 2 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
அணையின் நீர் நிலவரம், தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருவதை பொதுப் பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் அனுமதிக் கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று ஜலகம்பாறைக்கு படையெடுத்தனர்.
பாதுகாப்பு கருதி அவர்களை மேலே செல்ல காவல் துறையினர் தடுத்தனர். இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று நீரில் குளித்து மகிழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT