Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM
விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்க மரபுத் தொகையியல் சார்ந்த ஆய்வுகள் அவசியம் என சர்வதேச மாநாட்டில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் பேசினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டையொட்டி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் சார்பில், ‘வேளாண் மரபுத்தொகையியல் - 2021’ என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சு.மோகன் குமார் வரவேற்றார். துணைவேந்தர் நீ.குமார், மரபுத் தொகையியல் சார்ந்த இரண்டு நூல்களை வெளியிட்டு பேசும்போது, ‘‘குறைந்துவரும் விவசாய இயற்கை வளங்களுக்கு இடையில், உற்பத்தி செலவினத்தை குறைத்து, மகசூலை அதிகப்படுத்தி, விவசாயிகளின் நிகர லாபத்தை அதிகரிக்க, மரபுத் தொகையியல் சார்ந்த ஆய்வுகள் இன்றியமையாததாகும்’’ என்றார்.
இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக மிதவெப்ப மண்டல நாடுகளுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் அர்விந்த் குமார் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, மரபுத்தொகையியல் ஆராய்ச்சியின் மூலம் நிலக்கடலை, துவரை, கம்பு மற்றும் சிறுதானியங்களில் பயிர் இனப்பெருக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கினார். பயிர் உயிர்நுட்பவியல் துறை தலைவர் எம்.ரவீந்திரன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT