Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிக ளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தெரிவிக்கப்பட்ட குறைகளை ஆட்சியர் தலைமையிலான வேளாண் மற்றும் அனைத்து துறை முதன்மை அதிகாரிகளும் கேட்டறிந்தனர்.
அவர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
விவசாயிகளுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரம் தடையின்றி கிடைக்க போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், கடந்தாண்டு (2020-21) பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குறுவை (நெல்) பருவத்திற்கு 2,755 விவசாயிகளுக்கு ரூ.668.77 லட்சம் மற்றும் சம்பா நெல் பருவத்திற்கு 61,994 விவசாயிகளுக்கு ரூ.173.46 கோடி இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மொத்தமாக ஒதுக்கிய தொகை ரூ.507.66 கோடியில் கடலூர் மாவட்டத்திற்கு 34 சதவீதம் பெறப்பட்டுள்ளது.
எதிர்வரும் பருவ மழையை எதிர்கொள்ள விவசாயிகள் கூறும் அனைத்து பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை களுக்கு 15 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்தஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய நெல் சாகுபடி யில் இயற்கை விவசாய முறைகளையும், தொழில் நுட்பங்களையும் கடைபிடித்து அதிக மகசூல் எடுத்து சாதனை புரிந்தமைக்காக விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT