Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM
இளம் வயது வங்கி மேலாளர்கள் அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று வங்கிக் கணக்கு தொடங்கி, மக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் அனைத்து வங்கிகள் சார்பாக மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடந்தது. இம்முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். சென்னை இந்தியன் வங்கி பொது மேலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மண்டல மேலாளர் பழனி வரவேற்றார்.
வங்கிகள் சார்பில் ரூ.120.74 கோடி மதிப்பில் கடன் ஆணைகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு வங்கிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மாவட்டத்தில் ரிசர்வ் வங்கி அளித்த இலக்கை விட அதிகமாக வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. ஓசூர் அதீத தொழில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் அதன் அருகிலேயே பல மலைக் கிராமங்களில் நலிவடைந்த மக்கள் உள்ளனர்.
இளம் வயது வங்கி மேலாளர்கள் அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு நேரில் சென்று வங்கிக் கணக்கு தொடங்கி, கடன்களை வழங்க வேண்டும். அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பாடுபட வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து வங்கிகள் சார்பாக அமைக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தை பார்வையிட்டு, கடனை தவறாது திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளர்களை ஆட்சியர் கவுரவப்படுத்தினார்.
இதில், வங்கி மண்டல மேலாளர்கள் பாரத மாநில வங்கி ராஜா, தமிழ்நாடு கிராம வங்கி பாஸ்கரன், கனரா வங்கி மாதவி, மகளிர் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், மாவட்டதொழில் மைய மேலாளர் பிரசன்னாபாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், நபார்டு வங்கி மேலாளர் ஜெயபிரகாஷ், நிதிசார் கல்வி மைய ஆலோசகர் பூசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT