Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த சிறந்த செயல்பாடு - சேலம் ரயில்வே கோட்டம் முதலிடம் பிடித்து சாதனை :

சென்னையில் நேற்று ரயில்வே வார விழா நடந்தது. இதில், ஒட்டுமொத்த செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த கோட்டமாக தேர்வு செய்யப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்துக்கான கேடயத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸிடம் இருந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் பெற்றுக் கொண்டார்.

சேலம்

தெற்கு ரயில்வே கோட்டங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் அடிப்படையில் சேலம் ரயில்வே கோட்டம் முதலிடம் பெற்றது. மேலும், தொடர்ந்து 3-வது முறையாக சேலம் ரயில்வே கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் ரயில்வே வாரவிழா நேற்று நடந்தது.

விழாவில், தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரயில்வே கோட்டங்களின் ஒட்டுமொத்த செயல்பாடு, இயந்திரவியல் துறை, மின்சாரத்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளுக்கு விருது வழங்கப்பட்டன.

இதில், ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாடுகளில் சேலம் ரயில்வே கோட்டம் முதலிடம் பெற்றது.

மேலும், பொறியியல், மின்சாரம், இயந்திரவியல், கணக்கியல், பாதுகாப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளிலும் சிறப்பான செயல்பாட்டில் முதலிடம் பெற்றது. ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கான கேடயம் மற்றும் சான்றிதழை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம் இருந்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் பெற்றுக் கொண்டார்.

மேலும், சேலம் ரயில்வே கோட்டத்தின் முதுநிலை கோட்ட பொறியாளர் கண்ணன், முதுநிலை கோட்ட மின் பொறியாளர் செல்வன், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் ராஜா, முதுநிலை கோட்ட நிதி மேலாளர் மணிகண்டன், கோட்ட பாதுகாப்பு அலுவலர் பிரவீன்குமார் ஆகியோர் தங்கள் துறைகளுக்கான கேடயத்தை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை போத்தனூரில் உள்ள சிக்னல்- டெலிகம்யூனிகேஷன் பயிற்சி மையம் சிறந்த பயிற்சி மையமாகவும், சிறந்த பணிமனையாகவும் தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x