Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவு மிகுந்த திறனுள்ள விளையாட்டு வீரர்களை உருவாக்க, தமிழக விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்டுகளை நிரந்தரமாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் 27 விளையாட்டு விடுதிகள், 2 முதன்மை விளையாட்டு விடுதிகள், ஆண்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகள் 3 மற்றும் பெண்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன. 12 சிறப்பு விளையாட்டு அகாடமிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 1200 வீரர், வீராங்கனைகள் தங்கி பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெறுகின்றனர். விளையாட்டு விடுதிகளில் ஆண்டுதோறும் 1,975 பேர் தகுதி அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் உடல் அதிகமான சிரமத்துக்கும், அழுத்தத்துக்கும் உள்ளாகிறது.
முழு உடல் பலத்தையும் வெளிப்படுத்தி விளையாடும்போது உடல் தசைகளும், எலும்பு மூட்டு இணைப்புகளும் காயமடைய வாய்ப்பு அதிகம். அதுபோன்ற அபாயம் ஏற்படாமல் இருக்க வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு முழு உடல்திறன் அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
மாவட்ட விளையாட்டு விடுதி வளாகங்களில் ஆடுகளம் மற்றும் பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதுபோல் வீரர்களின் உடல்திறனை பராமரிக்க பிசியோதெரபி சிகிச்சை கிடைக்கச் செய்வதும் முக்கியம்.
ஆனால், மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமிக்கப்படவில்லை. அதனால் வீரர், வீராங்கனைகள் முழு திறனுடன் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள், தமிழ்நாடு கிளைத் தலைவர் வெ. கிருஷ்ணகுமார் கூறியதாவது:
சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் போட்டிகள் நடக்கும்போது, ஸ்பான்சர் செய்து வீரர்களுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், அரசு சார்பில் இதுவரை பிசியோதெரபிஸ்ட் நியமிக்கவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது விளையாட்டு மேம்பாடு தொடர்பான மருத்துவத்தை தொடங்குவதாகும்.
பிசியோதெரபி மருத்துவம் என்பது தசை உடற்கூறியல், உடலியல் மற்றும் நியூரோசைன்ஸ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவம். உடலில் எந்த தசையில் காயம் ஏற்பட்டாலும், எலும்பு மூட்டு இணைப்புகளில் வலி உண்டானாலும், முழு உடல் பலத்தையும் வீரர்களால் வெளிக்கொணர முடியாது. இத்தகைய பிரச்சினைகளோடு விளையாடும்போது காயம் மேலும் மோசமாகும்.
மாநில அளவில் சிறந்த உடல் திறனுள்ள வீரர்களை உருவாக்கினால்தான், சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பிரகாசிக்க முடியும். வீரர்களின் திறன் மேம்பாடு, உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை உருவாக்க பிசியோதெரபிஸ்ட்களால் மட்டுமே முடியும். உடற்பயிற்சிகளை தனது பிரதான மருத்துவ முறையாகக் கொண்டுள்ள ஒரே மருத்துவத் துறை பிசியோதெரபி துறைதான். விளையாட்டின்போது ஏற்படும் காயங்களில் இருந்து விரைவாக விடுபடுதல், உடலில் நடக்கும் இயற்கையான செயல்பாடுகளை துரிதபடுத்துதல் மற்றும் காயங்களுக்குப் பிறகு உடல் தகுதியை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தல் என வீரர்களின் வளர்ச்சியில் பிசியோதெரபிஸ்டுகளின் பங்கு அளப்பரியது.
தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்களை கட்டாயம் நியமிக்க வேண்டும்.
உடல்திறன் கொண்ட வீரர்கள் கிடைப்பது அரிதாகி வருவதாக விளையாட்டுத் துறை வல்லுநர்கள் கூறிவரும் சூழலில், பிசியோதெரபிஸ்ட்கள் நியமனம் காலத்தின் கட்டாயம்.
ஸ்வீடன் போன்ற நாடுகளில் பள்ளிகள் அளவிலேயே பிசியோதெரபிஸ்ட்கள் நியமனம் செய்யப்பட்டு உடல்திறன் மிக்க வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவிக்கின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT