Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு - கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் வாகனப் போக்குவரத்து : பேருந்து, லாரிகள் செல்ல அனுமதி இல்லை

திருச்சி

திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

திருச்சி மாநகரில் கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி பலத்த மழை பெய்தபோது, சுமார் 150 ஆண்டுகள் பழமையான கோட்டை ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் தரைக்குள் உள்வாங்கி சரிந்து சேதமடைந்தது.

இதையடுத்து, மேம்பாலத்தில் கனரக, இலகுரக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மணல் மூட்டைகளை அடுக்கி சேதமடைந்த பகுதியைத் தற்காலிகமாக சீரமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. அந்த நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதனிடையே, ஜூலை 15-ம் தேதி மீண்டும் பலத்த மழை பெய்ததில் மேம்பாலத்தில் 60 அடி நீளத்துக்கு சாலையில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, சேதமடைந்த பகுதியைச் சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாநகரின் மிக முக்கிய சாலையான இந்த மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், மக்கள் பல கி.மீ தொலைவுக்குச் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, கரூர் புறவழிச் சாலையில் எந்தநேரமும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி போலீஸாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியது. எனவே, கோட்டை ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், புதிய- அகலமான மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த மேம்பாலத்துக்குப் பதிலாக புதிய மேம்பாலத்தை மாநகராட்சி நிர்வாகமே கட்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடி செலவில் அந்த மேம்பாலத்தைத் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்து, புதிய தார் சாலை அமைக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியது. இதனால், மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள், இலகுரக சுமை வாகனங்கள் மட்டும் மேம்பாலத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் லாரிகள் போன்ற கனகர வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x