Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM
கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் பகுதிகளில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சேத்தியாதோப்பு அருகே கோதண்டவிளாகம் கிராமத்தில் மட்டும் 200 ஏக்கர் சம்பா நடவு பயிர்கள் மூழ்கியுள்ளன.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கோதண்ட விளாகம் கிராமம். இந்த கிராமத்தில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கரில் நடப்பு சம்பா நடவினை கடந்த 10 நாட்களாக நட்டனர். இப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மழை நீரானது நடவு செய்த சம்பா பயிரை மூழ்கடித்து நடவு செய்த பயிருக்கு மேல் 2 அடி முதல், 3 அடி வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
கோதண்டவிளாகம் கிராமம் மட்டுமல்லாமல் இதன் அருகில் உள்ள நங்குடி, நந்தீஸ்வரமங்கலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம சுற்றுப்புற பகுதிகளில் விளை நிலங்களில் நடவு செய்யப்பட்ட பயிர்களில் மழைநீர் தேங்கி உள்ளன. நங்குடி கோதண்டவிளாகம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் கானூர் ஜி வடிகால் வாய்க்கால் தூர் வாராமல் போனதாலும் வாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும் மழை தண்ணீர் செல்ல முடியாமல் வயலில் தேங்கியுள்ளது. பல இடங்களில் நடவு செய்யப்பட்ட நாற்று அழுகி விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரினால் மழை தண்ணீர் வடிந்து விடும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதை செய்வதில்லை. வேளாண் துறை அதிகாரிகள் எங்கள் வயலை பார்வையிட்டு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கவலையோடு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியில் தொடரும் மழை
விவசாயம் சார்ந்த மாவட்டமான கள்ளக்குறிச்சியில் தற்போது நெல், கரும்பு, வாழை,மஞ்சள் மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் 40 சதவீதம் அளவிற்கு நெல் சாகுபடி நடக்கிறது.கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது முழு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் கச்சிராயப் பாளையம் மற்றும் கல்வராயன் மலை பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் விவசாயிகள் நெல் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெல் மணிகள் முளைக்கவும் தொடங்கியுள்ளது.
வயல்களில் நீர் நிரம்பியுள்ளதால் பெரிய வகை நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு அறுவடை பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
தற்போது கூடுதல் செலவாகும் சிறிய வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மூலமே அறுவடை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அறுவடை பணிக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சாகுபடி மற்றும் அறுவடை செலவிற்கே மகசூல் ஈடாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சிராயப்பாளையம் பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT