Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி வட்டம் கரு.கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் காவிரி நீர், ஆழ்துளை கிணற்று நீரைக் கொண்டு சுமார் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததைப் போன்று, நிகழாண்டும் இங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கருதி ஏராளமான நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனர்.
ஆனால், அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கின. இதையடுத்து, அங்கு கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, எந்த தீர்வும் ஏற்படாததையடுத்து கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே குரும்பிவயல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருமணஞ்சேரி விலக்கு வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதைக் கண்டித்து, அங்கும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்ய முயற்சி செய்ததைக் கண்டித்து, விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒரு விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகக் தெரிகிறது. இதையடுத்து, அவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
இதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டல மேலாளர் செ.உமா மகேஸ்வரி, ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது, இன்று (அக்.12) முதல் இரு வாரங்களுக்கு குரும்பிவயலிலும், அதன்பிறகு அதே ஊராட்சியில் வேறொரு இடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இப்போராட்டத்தால் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT