Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM
புரட்டாசி மாதத்தையொட்டி அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மக்கள் மாறியதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரோட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரோடு வ. உ. சி. பூங்காவில் தற்காலிகமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி சில்லரை, மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.இது தவிர உழவர் சந்தைகள் மற்றும் தனியார் பழமுதிர் நிலையங்கள் மூலமும் காய்கறிகள் விற்பனையாகி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் ஈரோடு வருகின்றன. காய்கறி மார்க்கெட்டிற்கு தற்போது வழக்கமான வரத்து இருந்தும், தேவை அதிகரித்துள்ளதால், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.50-க்கும், புடலங்காய் ரூ.30-லிருந்து ரூ.40-க்கும், பீர்க்கங்காய் கடந்த வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.50 என விற்கப்படுகிறது. கடந்த வாரம் முருங்கைக்காய் கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
மிளகாய் ரூ.30 இஞ்சி ரூ.60, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.70, பீட்ரூட ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.20, அவரைக்காய் ரூ.40, கருப்புஅவரைக்காய் ரூ.140, குடைமிளகாய் ரூ.70, கோவைக்காய் ரூ.40 என அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது.தருமபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 5000 பெட்டிகளில் தக்காளி வந்தது. இதனால் 1 கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மழையால் தற்போது தினமும் 1000 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வருவதால் தக்காளி விலை கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறும்போது, ‘புரட்டாசி மாதம்'என்பதால் அசைவம் சாப்பிடுவது குறைந்துள்ளதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், கனமழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. எனவே, காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT