Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM
பழநி மலையைப் போல் திருப் பரங்குன்றம் மலைக்கு சுற்றுலாப் பயணிகளை கவர ‘ரோப் கார்’ அமைக்க இந்து சமய அற நிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள சுப்ரமணியசுவாமி கோவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நடக்கும் வைகாசி விசாகத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இதுதவிர ஆடி கிருத்திகை, தைப்பூசம், கந்சஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களும் விமரி சையாக நடைபெறும்.
சுற்றுலாப் பயணிகள் வருகை யை அதிகரிக்க திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பழநியை போன்று ரோப்கார் அமைக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டது. இந்த ரோப் கார் திட்டத்தை தற்போது வரை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அதற்கு பிறகு ஆலோசிக்கப்பட்ட திருச்சி மலைக்கோயிலில் ரோப் கார் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு ரோப் கார் அமைக் கப்பட்டதால் அதில் பயணம் செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள், பசுமலை, நாகமலை, யானைமலை மற்றும் மதுரை மாநகரின் முழு தோற்றத்தையும், மதுரை விமான நிலையத்தையும் மேலிருந்து கண்டு ரசிக்க முடியும். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்யவும் முடியும்.
ஆனால், தற்போது ரோப் கார் இல்லாததால் படிக்கட்டுகள் வழியாகவே பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மலை உச்சிக்கு செல்கி ன்றனர். செங்குத்தான மலையாக இருப்பதால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் எளிதில் செல்ல முடியவில்லை. எனவே பழநியை போல் திருப் பரங்குன்றம் மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாப் பய ணிகள் கூறுகையில், ‘‘திருப் பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்வதற்கு 600-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இதனால் இளைஞர்கள், திடகாத் திரமானவர்கள் மட்டுமே மலை உச்சிக்கு செல்ல முடிகிறது. பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மலை உச்சிக்கு செல்ல முடியாது. இங்கு ரோப் கார் அமைத்தால் பழநியைப் போல் திருப்பரங்குன்றம் மலையும் சுற்றுலா ரீதியாக வளர்ச்சியடையும். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அனை வரும் சென்று சாமி தரிசனம் செய்வதோடு, மதுரையின் அழ கையும் கண்டு ரசிக்கலாம். அதனால், அதிகமான சுற்றுலாப் பயணிகளை திருப்பரங்குன்றம் ஈர்க்கும் வாய்ப்பும் உள்ளது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT