Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

மருதுபாண்டியர் குருபூஜை நடத்த அனுமதி கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு :

மதுரை

நரிக்குடியில் மருதுபாண்டியர்கள் குருபூஜை நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவுக்கு விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சேர்ந்த மங்கைமணிவிழி நாச்சியார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் மருதுபாண்டியர் சகோதரர்கள். இவர்களின் குருபூஜை அக்டோபர் மாதம் அரசு சார்பில் கொண்டாடப்படும்.

நரிக்குடியில் மருது பாண்டியர்களின் வாரிசுகள் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. நரிக்குடியில் மருதுபாண்டியர்களின் சிலை களுக்கு குரு பூஜை நடத்தப்படும். இந்த விழா நரிக்குடி ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடத்தப்படும்.

சில பிரச்சினைகள் காரணமாக 6 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மருதுபாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அதேபோல், இந்தாண்டும் அக். 27-ல் மருதுபாண்டியர் குருபூஜை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 21-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x