Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM
ஒத்தக்கடை ராஜகம்பீரம் கண்மாய், கொட்டாச்சிக்கரை கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் கோரி தாக்கலான மனுவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை சீதாலெட்சுமி நகரைச் சேர்ந்த தினகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஒத்தக்கடையில் உள்ள ராஜகம்பீரம் கண்மாய் மற்றும் கொட்டாச்சிக்கரை கண்மாய் ஆகியவை ஒத்தக்கடை பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாகும். இப்பகுதி மக்கள் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் இவ்விரு கண்மாய்களை நம்பியே உள்ளனர்.
தற்போது ஒத்தக்கடை ஊராட்சி நிர்வாகம் ராஜகம்பீரம் கண்மாயில் குப்பைகளை கொட்டி நாசப்படுத்தி வருகிறது.
கண்மாய்க்குள் கிராவல் சாலை அமைத்து கண்மாயை இரண்டாக பிரித்துள்ளனர். குப்பைகள் கொட்டுவதால் கண்மாய் தண்ணீர் மாசடைந்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. கண்மாய் பகுதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகளும், சீமைக்கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன.
எனவே, ராஜகம்பீரம், கொட்டாச்சிக்கரை கண்மாய்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வைகை அணை தண்ணீரை பெரியார் கால்வாய் வழியாக கண்மாய்க்கு கொண்டுவந்து நிரப்பவும், கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT