Last Updated : 30 Sep, 2021 07:45 AM

 

Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM

கிருஷ்ணகிரியில் சீத்தாபழம் விளைச்சல் அதிகரிப்பு : கேரளாவுக்கு ஏற்றுமதி பாதிப்பால் விலை சரிவு

பர்கூரில் இருந்து ஏற்றுமதிக்காக சீத்தாபழம் கிரேடுகளில் அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கிருஷ்ணகிரி

கேரளாவுக்கு ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீத்தாபழம் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5143 சதுர கி.மீ. இதில் 2024 சதுர கி.மீ வனப் பரப்பு. இங்குள்ள வனப்பகுதிகள், சிறிய காடுகளில் சீத்தா மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனை தவிர மேலுமலை, சின்னாறு, கிருஷ்ணகிரி, பர்கூர், ஜெகதேவி, தொகரப்பள்ளி, அஞ்சூர், குருவிநாயனப்பள்ளி, மல்லபாடி, காளிக்கோயில், நாகமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சீத்தாபழம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள மழையால், நிகழாண்டில் சீத்தாபழம் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து சீத்தாபழம் கொள்முதல் செய்யும் விவசாயிகள், இங்கிருந்து பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

பெண்களுக்கு கைகொடுக்கும்

இதேபோல் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக அமர்ந்து, சீத்தா பழங்களை கூறு வைத்து, 100 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள், வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விளைந்த சீத்தாபழங்களை பறித்தும், விலைக்கு வாங்கி வந்தும் விற்பனையில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும், நிகழாண்டில் கேரளாவிற்கு ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் சீத்தாபழம் விளைச்சல் இருந்தும் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

10 டன் ஏற்றுமதி

இதுதொடர்பாக பர்கூரைச் சேர்ந்த சீத்தாபழம் விவசாயிகள், வியாபாரிகள் கூறும்போது, ஆண்டிற்கு ஒரு மகசூல் தரும் சீத்தாப்பழம், 24 கிலோ கொண்ட ஒரு கிரேடு தற்போது ரூ.220 முதல் ரூ.250 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. வெளியூரில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து இங்கேயே கொள்முதல் செய்கின்றனர். தற்போது பர்கூரில் இருந்து மட்டும் நாள்தோறும் 10 டன் சீத்தாபழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரள மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது அங்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விலை சரிந்துள்ளது. 2 மாதங்களுக்கு சீசன் உள்ளதால், கேரளாவில் தொற்று பாதிப்பு குறைந்து, சீத்தாபழம் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x